இயக்குநர் அட்லி இயக்கத்தில் வரும் 25ல், உலகம் முழுவதும் நடிகர் விஜய் மற்றும் நடிகை நயன் தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இப்படி ஒரு சோதனையை ?விஜயை மன்னிப்பு கூற சொல்லி பூ வியாபாரிகள் கோரியுள்ளனர் .
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் தங்களை நடிகர் விஜய் கேவலமாக பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி, பூ வியாபாரிகள், நடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பி இருக்கின்றனர்.
படத்தின் கதை என்னுடையது என்று சொல்லி, உதவி இயக்குநர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்று வழக்குப் போட்டு, அந்தப் பிரச்னையே முடியாமல் இருக்கிறது. மலையாளப் பட இயக்குநர் ஒருவரும் அங்கிருக்கும் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதேபோல, பிகில் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில், நடிகர் விஜய், செருப்புக் காலை, கறி வெட்டும் கட்டையில் வைத்து போஸ் கொடுப்பார். அதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் இறைச்சி வியாபாரிகள், போர்க்கொடி உயர்த்தினர். நடிகர் விஜய்க்கு எதிராக, கோவை போலீசில் புகாரே அளித்தனர்.
இந்நிலையில்தான், ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப வியாபாரிகள் சங்கத்த்தின் செயலர் படையப்பா ரங்கராஜன், நடிகர் விஜய்க்கு எதிராக கொந்தளிக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
அவர் அரசியல் பேசட்டும்; யாரிடம் வேண்டுமானாலும் அவர் மோதட்டும். அந்த விஷயத்துக்குள் நாங்கள் போகவில்லை. அவர் உதாரணமாக பேசவும், கதைச் சொல்லி, ரசிகர்களைக் கவரவும் நாங்கள்தான் கிடைத்தோமா. பூ வியாபாரிகள் என்றால், நடிகர் விஜய்க்கு அவ்வளவு கேவலமாகப் போய் விட்டதா? கேட்பதற்கு ஆள் இல்லை என நினைத்து, அவர் பூ வியாபாரிகளை என்ன வேண்டுமானாலும் பேசுவாரா? தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூ வியாபாரிகள் உள்ளனர். எல்லோரும், தற்போது நடிகர் விஜய்க்கு எதிராக திரண்டிருக்கிறோம். எங்களை கொச்சைப்படுத்திப் பேசிய நடிகர் விஜய், பூ வியாபாரிகளிடம் மன்னிப்பு கேட்டு, பிரச்னையை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிகில் படத்தை ஓட விடமாட்டோம். தொடர்ந்து போராட்டம்; பிரச்னை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதென்னடா புதுப் பிரச்னை என்று, பிகில் படக் குழுவினர், அதையும் சமரசம் செய்ய கிளம்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.